சண்டிகர்; சட்டப்பேரவை தேர்தலில் நிற்க போவதாக வேட்பு மனு தாக்கல் செய்த பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் அதிருப்தி வேட்பாளர்கள் உள்பட 190 பேர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர்.
ஹரியானா மாநில சட்டசபைக்கு அக்டோபர் 5ம் தேதி தேர்தல் நடக்கிறது.ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் சூறாவளி பிரசாரத்தில் இறங்கியுள்ளன. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்தனர்.போட்டியிட வாய்ப்பு கிடைக்காத பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 1,559 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடு முடிவடைந்ததால், மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. பரிசீலனைக்கு பின், 1,221 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 190 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர்.இதில், சீட் கிடைக்காத அதிருப்தியில் வேட்புமனு தாக்கல் செய்த பா.ஜ.,வின் முக்கிய பிரமுகரும், முன்னாள் துணை சபாநாயகருமான சந்தோஷ் யாதவ், அம்பாலா தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ., ஜாஸ்பி மலர் ஆகியோர், மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர்.
இதையடுத்து 1,031 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஹிசார் தொகுதியில் மட்டும் 89 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஜிந்த் தொகுதியில் 72 வேட்பாளர்களும், சோனிபட் தொகுதியில் 65 வேட்பாளர்களும், ஃபரிதாபாத் தொகுதியில் 64 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.