கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டத்தில் பெரிய அளவிலான மூன்று கால்நடை மருத்துவ முகாம்கள் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் 2023-24 திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, மாவட்டத்தில் இரண்டாவது முகாமானது வரும் 26.07.2023 இன்று இராமநாதபுரம் கோட்டம், மண்டபம் ஒன்றியம், கோரவள்ளி கிராமத்தில் நடத்தப்படவுள்ளது.
கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவம்
இம்முகாமில் கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசிகள், குடற்புழு நீக்க மருந்துகள், செயற்கை முறை கருவூட்டல், சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகள், புற ஒட்டுண்ணிகள் நீக்கம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும் கால்நடை நோய் புலனாய்வு பிரிவின் மூலம் கால்நடைகளுக்கான தோல் நோய்கள் கண்டறிதல், ரத்தம், சளி, பால் ஆகிய மாதிரிகள் சேகரம் செய்து ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, இதன் தொடர்பான நோய் தாக்குதல் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து கால்நடை வளர்ப்போர்களுக்கு விளக்கப்படவுள்ளது. கிடேரி கன்றுகளுக்கான கருச்சிதைவு நோய் தடுப்பூசி மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் சிறந்த கறவைப்பசு மற்றும் கன்றுகளுக்கு பரிசுகளும் வழங்கப்படவுள்ளது.
விவசாயிகள் தங்கள் கால்நடைகளை சிறப்பு முகாம்களுக்கு அழைத்து வந்து இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணுசந்திரன்,தெரிவித்துள்ளார்.