மாவட்ட ஆட்சித்தலைவர்.ஜானி டாம் வர்கீஸ், அவர்கள் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது.
உள்ளாட்சிகள் தினமான 01.11.2022 அன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற வேண்டுமென வழிவகை செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த ஆண்டு அரசு உத்தரவின் பேரில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு 01.11.2022 அன்று காலை 11.00 மணிக்கு இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அரசு விதித்துள்ள COVID-19 முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு வழிமுறைகளுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையரால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளையும் கடைபிடித்து கிராம சபை கூட்டம் நடத்திட மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
இந்த கிராம சபைக் கூட்டத்தில், மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கௌரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், மக்கள் திட்டமில் இயக்கம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி வீட்டுவரி / சொத்து வரி செலுத்துதல், மகளிர் சுய உதவிக் குழு உருவாக்குதல்,
பண்ணை மற்றும் பண்ணை சாரா திட்ட இனங்கள், மக்கள் நிலை ஆய்வு, சுகாதாரம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம், கலைஞர் வீட்டு வசதித் திட்ட பயனாளிகள் தேர்வு செய்தல் மற்றும் இதர பொருட்கள் குறித்து இந்த கிராம சபையில் விவாதித்திட அரசு தெரிவித்துள்ளபடியால் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து கொரோனா தொற்று தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்து இந்த கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்.ஜானி டாம் வர்கீஸ், அவர்கள் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.