இளையான்குடி தாயமங்கலம் அருகே கிராமத்தை சூழ்ந்த நீர் கிராம மக்கள் தவிப்பு
தாயமங்கலம் அருகே சாத்தமங்கலம் கிராமத்தை மழைநீர் சூழ்ந்தது. இதனால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் கிராம மக்கள் தவிக்கின்றனர்.
தாயமங்கலம் ஊராட்சி சாத்தமங்கலத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இக்கிராமம் தாழ்வான பகுதியில் உள்ளதோடு, மழைநீர் வெளியேற வடிகால் வசதியும் இல்லை.
இந்நிலையில் நேற்று முன் தினம் அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் சாத்தமங்கலம் கிராமத்தை மழைநீர் சூழ்ந்தது. மேலும் 20-க்கும் மேற்பட்ட வீடுகளைச் சுற்றிலும் முழுமையாக தண்ணீர் தேங்கியதால் அவர்கள் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் கூறியதாவது: மின்கம்பங்களையும் மழைநீர் சூழ்ந்துள்ளதால், மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மழைநீர் சூழ்ந்து கொள்ளும் சமயங்களில் பல மணி நேரம் மின் விநியோகமும் நிறுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதேநிலைதான் நீடிக்கிறது.
ஆனால், மழைநீர் வெளியேற வடிகால் வசதி செய்து தரவில்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க இல்லை. மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.