இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், ஆய்வு மேற்கொண்டு தெரிவித்தர்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்களின் வாழ்வாதாரம் உயர்ந்திடும் வகையில் பல எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். பெண்கள் சுயமரியாதையுடன் திகழ வேண்டும் என்று உயர்ந்த நோக்கத்திலும், பொருளாதார நிலையில் ஆணுக்கு பெண் நிகரானவர் என திகழும் வகையில் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். இந்த திட்டங்களில் வரிசையில் முத்தான திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் ஆகும்.
இத்திட்டம் தொடர்பாகவும் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளின் தகுதிகள் குறித்தும் பொதுமக்கள் அறிந்திடும் வகையில் மாவட்டத்தின் முக்கிய பகுதியில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் முதற்கட்டமாக 325 இடங்களில் முகாம் நடைபெற உள்ளது. முகாம்கள் நடைபெறும் இடங்களில் தேவையான மின் இணைப்பு வசதி, நெட்வொர்க் இணைப்பு வசதிகள், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி மற்றும் முகாமிற்கு வருகை தரும் பொதுமக்கள் அமர்வதற்கு ஏதுவாக அந்தந்த பகுதிகளில் இருக்கை வசதி போன்றவற்றை அதற்காக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் வழங்கும் முகாம் நடைபெறும் பகுதிகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், நியாய விலை கடைகளில் விண்ணப்பம் வழங்கப்படுவதை கண்காணித்திடவும், நியாய விலைக்கடை பணியாளர்கள் தங்கள் கடைகளுக்கு தேவையான விண்ணப்பங்கள் பெறுவது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களை தீர்த்திடவும் பகுதிவாரியாக நியமிக்கப்பட்டிருந்த பொறுப்பு அலுவலர்கள் செயல்பட வேண்டும்.
மகளிர் திட்டம் மூலம் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தி அவர்களுக்கு இத்திட்டத்தில் சேரக்கூடிய பயனாளிகளின் தகுதிகள் மற்றும் பிற விளக்கங்களை தெரிவிக்க வேண்டும். முகாம் நடைபெறும் இடங்கள் தேவையான தன்னார்வலர்கள் விவரங்கள் மற்றும் மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர்கள் குறித்த விவரப்பட்டியலை தயார் செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். காவல்துறையின் மூலம் முகாம் நடைபெறும் இடங்களில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கேவிந்தராஜலு , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்(பொ) அபிதா ஹனிப், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) மாரிச்செல்வி , இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.