ராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் மூலம் உலக எய்ட்ஸ் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையேற்று பொதுமக்களுக்கான விழிப்புணர்வு குறித்த வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
விழிப்புணர்வு
மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, “ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் நாள் உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் நோக்கம் எய்ட்ஸ் நோய் தடுப்பு குறித்தும் அதனை கட்டுப்படுத்துவது குறித்தும் பாதுகாப்புடன் பொதுமக்கள் இருப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனையொட்டி இராமநாதபுரம் மாவட்டத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாடு துறையின் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பழகுவதோ, பேசுவதாலோ
பொதுவாக ஒவ்வொருவரும் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம். சமுதாயத்தில் பாகுபாடு என்பது இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை வேறுபடுத்தி காட்டுவதை தடுக்க வேண்டும் என்பதே ஆகும். ஆதலால் முதலில் விழிப்புணர்வு என்பது சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். நோயினால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கிட கூடாது. இந்நோய் என்பது கட்டுக்குள் இருக்கக்கூடிய தொற்று நோயாகும். இந்நோய் பாதிக்கப்பட்டவர்களுடன் பழகுவதோ, பேசுவதாலோ மற்றவர்களுக்கு பரவும் என்ற எண்ணத்தை விட்டு விட வேண்டும். இந்த நோய்க்கான சிகிச்சைகளை தமிழக அரசு போதியளவு வழங்கி வருகின்றது. மேலும் சுகாதாரத் துறையுடன் தொண்டு நிறுவனங்கள் இணைந்து விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
சமுதாயத்தில் சரி நிகராக வாழ்ந்திட
இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் தின மைய கருத்து “எச்.ஐ.வி/ எய்ட்ஸ்டன் வாழும் மக்களுக்கு ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை முடிவுக்கு கொண்டு வருவோம”. எச்.ஐ.வி/ எய்ட்ஸ் தொற்றிற்கு முடிவு காட்டுவோம் என்பதே ஆகும். எச்.ஐ.வி பாதிப்பால் உயிரிழந்தவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சமுதாயத்தில் சரி நிகராக வாழ்ந்திட வேண்டும். அவர்களுக்கு மனதளவில் எந்த இடர்பாடுகளும் இருக்கக்கூடாது. என்ற நோக்குடன் இத்தகைய நிகழ்ச்சி நடைபெறுகின்றன. இதன் அடிப்படையில் சமுதாயத்தில் எந்த பாகுபாடும் இன்றி வாழ்ந்திட வேண்டும். மேலும் அரசு பல்வேறு நலத்திட்டங்களை பொது சுகாதாரத்துறையின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கி வருகிறது. அதனை பெற்று சிறப்புடன் இருந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் பேசினார்.

முன்னதாக உலக எய்ட்எஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

பின்னர் உலக எய்ட்ஸ் தினம் 2022-ஐ முன்னிட்டு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.

பாராட்டு சான்று, நினைவு பரிசு
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மூலம் பொதுமக்களிடையே எய்ட்ஸ் தொற்றினால் ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பணிகளை சிறந்த முறையில் மேற்கொண்ட பணியாளர்களுக்கு பாராட்டு சான்று மற்றும் நினைவு பரிசு வழங்கியதுடன பின்னர் “சமபந்தி போஜனம்” நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.செந்தில் குமார், சுகாதார பணிகள் மற்றும் எய்ட்ஸ் காட்டுபாட்டுத்துறை துணை இயக்குநர் மரு.அஜித் பிரபு குமார், இணை இயக்குனர் மருத்துவம் மரு.சகாய ஸ்டீபன் ராஜ், துணை இயக்குனர்கள் மரு.ரவிச்சந்திரன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர் முருகேசன், மாவட்ட வள அலுவலர் முத்துமாரி, மருத்துவ அலுவலர் மரு.பாத்திமா பதுல் ராணி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.