தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200/-ம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம்,
+2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400/-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600/- வீதம், 3 ஆண்டிற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இத்தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பதிவுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். தொடர்ந்து பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
- மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- (எழுபத்திரெண்டாயிரத்திற்கு) மிகாமல் இருக்க வேண்டும்.
- அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ / மாணவியருக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது.
- எனினும், தொலைதூரக்கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.
- இந்த உதவித்தொகை மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.
- பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600/- வீதமும்
- +2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750/-ம், பட்டதாரிகளுக்கு ரூ.1000/-ம் வழங்கப்பட்டு வருகிறது.
வேறு எந்த ஒரு அலுவலகத்திலும் உதவித்தொகை பெறாதவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும்.
இந்த உதவித்தொகை பெறுவதற்கு மேற்காணும் தகுதிகள் உள்ளவர்கள் இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் சென்று அனைத்து வேலை நாட்களிலும் இலவசமாக விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். அனைத்து வேலைநாட்களிலும் உதவித்தொகை கோரும் விண்ணப்பத்தினை பயன்தார்கள் வேலைவாய்ப்புத்துறை இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். (இணையதள https://tnvelaivaaippu.gov.in/Empower) மேலும், உதவித்தொகை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எவ்வித தடையும் ஏற்படாது.
எனவே இம்மாவட்டத்தைச் சார்ந்த தகுதியான விண்ணப்பதாரர்கள் உதவித்தொகை கோரி விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்துள்ளார்.