ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சித் திட்ட பணிகள் ஆய்வு
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், நயினார்கோயில் ஊராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வளர்ச்சித் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நயினார்கோயில் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டதுடன் தூய்மைப் பணியாளர்களிடம் ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்து கேட்டறிந்ததுடன், நாள்தோறும் சேகரிக்கும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பயன்படுத்துவதுடன் ஊராட்சி பகுதிகளில் தூய்மையாக வைத்துக் கொள்ள திட்டமிட்டு செயல்பட வேண்டுமென பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் நயினார்கோயில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு சென்று காலை உணவு திட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கிய காலை உணவை ஆய்வு செய்ததுடன் மாணவ மாணவிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். தொடர்ந்து அங்கன்வாடி மையத்திற்கு சென்று குழந்தைகளின் வருகை பதிவேடை ஆய்வு செய்ததுடன் குழந்தைகளுக்கு சரியான எடை உள்ளதா என பார்வையிட்டதுடன், நாள்தோறும் அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்து வழங்கி பராமரித்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
மேலும் பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்து உள்நோயாளி பிரிவு மற்றும் வெளி நோயாளி பிரிவுகளை பார்வையிட்டதுடன், ஆய்வுக்கூடம், மருந்தகம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் பரமக்குடி நகரில் செயல்பட்டுவரும் முதல்வர் மருந்தகத்திற்கு சென்று மக்களுக்கு தேவையான மருந்துகள் வழங்கப்படுவது குறித்து கேட்டறிந்தத்துடன் தேவைக்கேற்ப மருந்து, மாத்திரைகள் இருப்பு வைத்து சிறந்த முறையில் செயல்பட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் பரமக்குடி சார் ஆட்சியர் செல்வி.அபிலாஷா கெளர், பரமக்குடி வட்டாட்சியர் வரதன் அவர்கள், மகளிர் திட்ட உதவி அலுவலர்கள் ராஜா முகமது, தங்கபாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட கலர் கலந்து கொண்டனர்