பரமக்குடியில் வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து வருவாய்த்துறை அலுவலர்களும் பங்கேற்பு – அரசுக்கு வலியுறுத்தல்
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், பல்வேறு நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் முதுநிலை படி வருவாய் வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், காலிப் பணியிடங்களில் பணியாற்றி வரும் அலுவலர்களுக்கு உரிய நேரத்தில் பதவி உயர்வு வழங்க வேண்டும், வருவாய்த்துறை அலுவலர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற இந்த ஒருநாள் பணி புறக்கணிப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக பரமக்குடி வருவாய்த்துறை அலுவலர்கள் அலுவலகப் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்க நிர்வாகிகள் கூறுகையில், பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்படாததால் பணிச்சுமை அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர். ஒரே அலுவலர் பல பொறுப்புகளை கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்புவதுடன், தகுதியான அலுவலர்களுக்கு காலமுறைப்படி பதவி உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். வருவாய்த்துறையின் செயல்திறனை மேம்படுத்தவும், அலுவலர்களின் நலன்களை பாதுகாக்கவும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கஅறிவிப்பின் பேரில், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் இந்தப் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, இராமநாதபுரம் மாவட்டத்திலும் மாவட்டச் சங்கத்தின் தலைமையில் அலுவலர்கள் ஒருங்கிணைந்து போராட்டத்தை நடத்தினர். சங்க நிர்வாகிகள் வெளியிட்ட அறிக்கையில், அரசுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், இந்தப் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
பணி புறக்கணிப்பு காரணமாக வருவாய் அலுவலகங்களில் பட்டா மாற்றம், சான்றிதழ் வழங்குதல், வருவாய் தொடர்பான மனுக்கள் பரிசீலனை உள்ளிட்ட சில பணிகள் பாதிப்பு, வருவாய்த்துறை அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு விரைந்து பரிசீலித்து, சுமுகமான தீர்வு எட்ட வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


