மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தகவல்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக சிம்ரன்ஜீத் சிங் காலோன் பதவி ஏற்று பேசியதாவது,
“இந்திய ஆட்சிப்பணியாளராக 2016 ஆம் ஆண்டு தேர்வு பெற்று தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகள் சார் ஆட்சியராகவும், அதனைத் தொடர்ந்து சென்னை பெருநகர மாநகராட்சியின் இணை ஆணையராகவும், தொடர்ந்து மதுரை மாநகராட்சியின் ஆணையராகவும் பணியாற்றியதுடன், தொடர்ந்து தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இணை ஆணையராக பணியாற்றி தற்பொழுது இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவராக பதவியேற்றுள்ளேன்.
குடிநீர் – சிறப்பு கவனம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் கிடைக்க செயல்படுவேன். மேலும் மக்களின் முக்கிய தேவைகளில் ஒன்றான குடிநீர் திட்டப்பணிகளுக்கு சிறப்பு கவனம் எடுத்து செயல்படுத்துவதுடன், இதற்காக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கரூர் மாவட்டம் காவிரி ஆற்றிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடித்து மாவட்டத்திலுள்ள மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற செயல்படுவேன். அதேபோல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சுற்றுலா, கைத்தறி, விவசாயம், மீன்பிடி
மேலும் இம்மாவட்டத்தில் அதிக சுற்றுலா தளங்கள் உள்ளதால் அதை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் மீனவர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பரமக்குடி பகுதியில் உற்பத்தியாகும் கைத்தறி ஆடைகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதையொட்டி அதனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு திட்டங்கள், குறைதீர்க்கும் முகாம்
அதேபோல் மக்கள் குறைதீர்க்கும் முகாம், மக்கள் தொடர்பு திட்ட முகாம், மக்களுடன் முதல்வர் திட்டம், உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் மக்களிடம் மனுக்கள் பெற்று உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு வழங்குவதுடன் அரசின் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சென்றடைவதற்கு சிறப்பாக பணியாற்றுவேன். மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பொதுமக்கள் அனைவரும் உறுதுணையாக இருந்து ஆதரவு அளித்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தார்.