இராமநாதபுரம் பரக்கத் மஹாலில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் துறையின் மூலம் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி குத்துவிளக்கேற்றி கைத்தறி கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார்.
இவ்விழாவில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை அரசு செயலாளர் வே.அமுதவல்லி, கைத்தறித்துறை இயக்குநர் மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் இராம.கருமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கைத்தறி கண்காட்சி
தொடர்ந்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் கைத்தறி கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். இக்கண்காட்சியில் 60-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட நெசவாளர்களின் உற்பத்தி பொருள்கள் மற்றும் காஷ்மீரி சால்வைகள், ஹரியானா பெட்ஷீட்கள், மீரட் போர்வைகள், ஷோலாபூர் பெட்ஷீட்கள், பரமக்குடி பம்பர் காட்டன் சேலைகள்,1000 புட்டா சேலைகள், புதினம் காட்டன் சேலைகள், மலிவு விலை காட்டன் சில்க் சேலைகள், ஈரோடு மற்றும் கரூர் பெட்சீட்டுகள், போர்வைகள், தலையணை உறைகள், சேலம் பட்டு வேஷ்டிகள், மெத்தை விரிப்புகள், ஸ்கிரீன் துணிகள், கோவை, திருப்பூர் மற்றும் மதுரை சுங்குடி காட்டன் புடவைகள், குறிஞ்சிப்பாடி கைலிகள், திருப்புவனம் பட்டு சேலைகள், கோவை கோரா காட்டன் & மென்பட்டு சேலைகள், திண்டுக்கல் பனாரஸ் சேலைகள் மற்றும் நாகர்கோவில் வடசேரி கைத்தறி வேட்டிகள், கைலிகள், துண்டுகள் போன்ற ஏராளமான இரகங்கள், கைவினைப்பொருட்கள் காட்சிப்படுத்தி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
விற்பனை இலக்கு ஒரு கோடி
தமிழ்நாட்டு பருத்தி இரகங்களுக்கு 30% (அதிகபட்சம் ரூ.150/- வரை) பட்டு இரகங்களுக்கு ரூ.300/-ம் அரசு தள்ளுபடியாக வழங்கப்படுகிறது. கிரெடிட் கார்டு / டெபிட் கார்டு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் ரூ.1 கோடி அளவிலான விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சி 04.10.2025 முதல் 17.10.2025 வரை நடைபெறுகின்றன. பொதுமக்கள், அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் தனியார் நிறுவன பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கண்காட்சி அரங்கிற்கு வருகை தந்து தங்களுக்கு தேவையான கைத்தறி ஆடைகளை வாங்கி நெசவாளர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்திட வேண்டும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார். தொடர்ந்து கைத்தறி கண்காட்சியில் முதல் விற்பனையை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வாடிக்கையாளர்களுக்கு வழங்கினார்.
கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
பின்னர் கைத்தறி துறையின் மூலம் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு, நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கும், கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் கைத்தறி உபகரணங்கள் 10 பயனாளிகளுக்கும் என 25 பயனாளிகளுக்கு ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் ஆர்.கே.கார்மேகம், இராமநாதபுரம் நகர் மன்ற துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம், பரமக்குடி நகர் மன்றத்தலைவர் சேது கருணாநிதி, கைத்தறித்துறை கூடுதல் இயக்குநர் தமிழரசி, துணிநூல் துறை கூடுதல் இயக்குநர் மகாலிங்கம், கைத்தறித்துறை இணை இயக்குநர்கள் கணேசன், மாதேஸ்வரன், உதவி இயக்குநர் சேரன், கண்காணிப்பு அலுவலர் ரெத்தினபாண்டி, கைத்தறி துறை ஆய்வாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


