சண்டிகர்: ‘புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரியானா எம்எல்ஏக்களில் 96 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள். 12 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன’ என, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்த ஹரியானா சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 90 தொகுதிகளில், பா.ஜ., 48 இடங்களில் வென்றது. காங்கிரஸ், 37 இடங்களில் வென்றது. இந்திய தேசிய லோக் தளம், இரண்டு இடங்களிலும், சுயேச்சைகள் மூன்று இடங்களிலும் வென்றனர்.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 90 ஹரியானா எம்எல்ஏக்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்தது. இதுகுறித்து ஏடிஆர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரியானாவில் 90 எம்எல்ஏக்களின் பிரமாணப் பத்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
90 எம்எல்ஏக்களில் 86 பேர் கோடீஸ்வரர்கள். 44 சதவீதம் பேர் ரூ.10 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர். 2.2 சதவீதம் பேர் மட்டுமே ரூ.20 லட்சத்துக்கும் குறைவான சொத்து வைத்துள்ளனர். எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.24.97 கோடி.
இது கடந்த 2019 சட்டமன்றத் தேர்தலின் போது ரூ.18.29 கோடியாக இருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட 12 எம்எல்ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 63 சதவீதம் பேர் பட்டதாரிகள் அல்லது முதுகலை பட்டதாரிகள். 29 சதவீதம் பேர் 8 முதல் 12ம் வகுப்பு வரை கல்வித் தகுதி பெற்றுள்ளனர்.பெண் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக அதிகரித்துள்ளது. 66 சதவீதம் எம்.எல்.ஏ.,க்கள் 51 வயது முதல் 80 வயதிற்குட்பட்டவர்கள்.
ஜிண்டால் குழுமத்தின் தலைவரான ஹிசார் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ., சாவித்ரி ஜிண்டால் ரூ.270 கோடி சொத்துகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.
2ம் இடத்தில் பா.ஜ.,வின் சக்தி ராணி சர்மா ரூ.145 கோடி சொத்துகளுடன் உள்ளார். 3ம் இடத்தில், ரூ.133 கோடி சொத்துக்களுடன் பா.ஜ.,வின் ஸ்ருதி சவுத்ரி உள்ளார். இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.