சென்னை: த.வெ.க., மாநாட்டுக்கு வருபவர்கள் யாரும் மது அருந்தி விட்டு வரக்கூடாது என்று கட்சி மேலிடம் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசியலுக்கு வரும் பிரபல நடிகர் விஜய், தனது கட்சிக்கு தமிழ்நாடு வெற்றிக் கழகம் என பெயரிட்டுள்ளார். சமீபத்தில் அவர் கட்சி கொடி மற்றும் பாடலை அறிமுகப்படுத்தினார்.
கட்சியின் முதல் மாநாட்டை இன்று (செப்டம்பர் 23) நடத்த உள்ளதாகவும் அவர் கூறினார். ஆனால் தேதி மாற்றப்பட்டு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் மாநாடு நடைபெறும் என அறிவித்துள்ளார்.இதற்கு காவல்துறையிடம் அனுமதியும் பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநாட்டுக்கு வருபவர்கள் எப்படி வர வேண்டும்? எப்படி நடந்து கொள்ள வேண்டும்? கட்சித் தலைமை சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முக்கியமாக 8 நிபந்தனைகளை ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு கட்சி தலைமை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
* பெண் போலீசாரிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.
*யாரும் மது அருந்திவிட்டு வரக்கூடாது.
* சாலையில் எந்த வாகனங்களுக்கும் இடையூறு செய்யக்கூடாது.
*அதிகாரிகளிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.
* கிணறு, ஆபத்தான பகுதிகள் இருப்பின் கவனமாக இருக்க வேண்டும்.
*இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் சாகசங்களில்(பைக் ஸ்டண்ட்) ஈடுபடவே கூடாது.
* மருத்துவக்குழு, தீயணைப்புத்துறையினருக்கு உரிய ஏற்பாடுகள் செய்து தரவேண்டும்.
*பேருந்து, வேன்களில் அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே ஆட்களை ஏற்றி வரவேண்டும்.
இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதன் பின்னணியில் சில அடிப்படை காரணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த உத்தரவுகளில் முக்கியமானது பைக் ஸ்டண்ட்களில் ஈடுபடக் கூடாது என்ற உத்தரவுதான் என அக்கட்சி நிர்வாகிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
விழுப்புரத்தை சேர்ந்த ரசிகர் ராஜசேகர் என்பவர் பைக்கில் கொடியை கட்டிக்கொண்டு அதிவேக சாகசம் செய்து வருகிறார். இந்த சாகசத்தை அவரது நண்பர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து போலீசார் ராஜசேகரை கைது செய்துள்ளனர்.இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டும் கட்சி நிர்வாகிகள், பைக் ஸ்டண்ட்டை மேலிடம் விரும்பவே இல்லை, அதனால் தான் இந்த கண்டிஷன் போடப்பட்டு உள்ளதாகவும் கூறுகின்றனர்.