சென்னை: ‘அமெரிக்க பயணத்தின் போது 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ரூ.7,618 கோடி முதலீடு பெறப்படுவதன் மூலம் 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்’ என இன்று(செப்.14) முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நிருபர்களிடம் கூறினார்.
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 27-ம் தேதி அமெரிக்கா சென்றார். சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.17 பயணத்தை முடித்து கொண்டு, நேற்று(செப்.,13) அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட முதல்வர் துபாய் வழியாக, இன்று(செப்.,14) சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை அமைச்சர்கள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஸ்டாலின் கூறியதாவது: அமெரிக்க அரசின் பயணம் வெற்றியும் சாதனையும் ஆகும். இது தனிப்பட்ட முறையில் எனக்குக் கிடைத்த வெற்றியல்ல, தமிழக மக்களின் வெற்றிப் பயணம். அமெரிக்க பயணத்தின் போது 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.ரூ.7,618 கோடி முதலீட்டில் 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும் பல நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன.
உலகின் தலைசிறந்த 25 நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்தேன். திருச்சி, மதுரை, கோவை, ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு பயன் அளிக்கும்.எங்களது பேச்சுவார்த்தை மூலம் மீண்டும் சென்னை வருகிறது போர்ட் நிறுவனம்.
பிரதமர் மோடியை சந்தித்து புதிய கல்விக் கொள்கை மற்றும் மெட்ரோ பணிகளுக்கான நிதியை வலியுறுத்துவேன். மதுவிலக்கு மாநாடு குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்தார்; அதற்கு மேல் நான் சொல்ல வேண்டியதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.