புதுடில்லி : நடப்பு மாதத்தின் முதல் பாதியில், நாட்டின் நிதித்துறை பங்குகளில் இருந்து, வெளிநாட்டு முதலீட்டாளர்கள், 14,790 கோடி ரூபாய் திரும்பப் பெற்றுள்ளனர்.
ஒருபுறம் அமெரிக்காவில் மந்தநிலை ஏற்படும் என்ற அச்சம், வங்கிகளின் மிதமான ஜூன் காலாண்டு முடிவுகள், டெபாசிட் வளர்ச்சி மற்றும் ரிசர்வ் வங்கியின் பண கையிருப்பு மீதான கட்டுப்பாடுகள் ஆகியவை முதலீட்டாளர்களை நிதிப் பங்குகளில் ஆர்வம் காட்டுவதைத் தடுக்கின்றன.
அதே நேரத்தில், பாதுகாப்பான முதலீடுகளாகக் கருதப்படும் ஹெல்த்கேர் மற்றும் நுகர்வோர் துறை பங்குகளில் குறைந்த அளவு முதலீடு செய்தனர். அந்நிய முதலீட்டாளர்கள் நிதித்துறை பங்குகளில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளனர். நெருக்கடியான சூழல் ஏற்படும்போது, இந்தத் துறையைச் சேர்ந்த பங்குகள்தான் முதலில் விற்கப்படுகின்றன.
கடந்த ஜூலை மாத நிலவரப்படி நிதித் துறை சார்ந்த பங்குகளில் 27.48 சதவீதமாக இருந்த அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடு, கடந்த 15ம் தேதி நிலவரப்படி 27.28 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, தொழில்நுட்பத்துறை சார்ந்த பங்குகளில் 9.33 சதவீதம் முதலீடு செய்துஉள்ளனர்.
இதற்கிடையே கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மட்டும் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளிலிருந்து 10,073 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளனர்.இதுவே ஒரே நாளில் இவர்கள் திரும்பப் பெற்ற மூன்றாவது அதிகபட்ச தொகையாகும். அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகள் கவலை அளிக்கும்படியாக இருந்ததால், ஆகஸ்ட் 5ம் தேதி உலகளவில் அனைத்து பங்குச் சந்தைகளும் கடும் சரிவு கண்டன.
அன்று மட்டும் சென்செக்ஸ் குறியீடு கிட்டத்தட்ட 3 சதவீதம் சரிந்தது குறிப்பிடத்தக்கது.