பெங்களூரு: துலீப் டிராபி தொடரில் இருந்து மூத்த வீரர்கள் ரோஹித், கோஹ்லி, அஷ்வின், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. துலீப் டிராபி (செப்டம்பர் 5-22) என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தால் (பிசிசிஐ) நடத்தப்படும் முதல் தரப் போட்டியாகும். மொத்தம் 4 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் தலா ஒரு முறை விளையாடும். முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு கோப்பை வழங்கப்படும். இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது.
முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கத்தில் செப்., 19ல் துவங்குகிறது.இரண்டாவது டெஸ்ட் கான்பூரில் (செப்.27-அக்.1) நடக்கிறது. இதற்கு தயாராகும் வகையில் மூத்த வீரர்கள் துலீப் டிராபியில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரோஹித் சர்மா, விராட் கோலி, தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மற்றும் காயத்தில் இருந்து மீண்டு வரும் முகமது ஷமி ஆகியோருக்கு தொடரில் பங்கேற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ரோஹித்தும், கோஹ்லியும் விரும்பினால் இந்தத் தொடரில் விளையாடலாம்.
மற்ற வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், லோகேஷ் ராகுல், சுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், குல்தீப் யாதவ், ரிஷப் பந்த் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். சாலை விபத்துக்குப் பிறகு (2022) முதல் முறையாக ரிஷப் பந்த் முதல்தரப் போட்டியில் விளையாட உள்ளார்.
அதேபோல் வரும் ஆக., 15ல் துவங்கும் புச்சி பாபு தொடரில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் (மும்பை), விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் (ஜார்கண்ட்) விளையாட உள்ளனர்.
பெங்களூருவுக்கு மாற்றம்
துலீப் டிராபி தொடர் ஆந்திராவின் அனந்தபூரில் நடக்கவுள்ளது. செப். 5-8ல் நடக்கும் 2 போட்டிகளில், ‘ஏ’-‘பி’, ‘சி’-‘டி’ அணிகள் மோதுகின்றன. அனந்தபூர் நகருக்கு விமான போக்குவரத்து வசதி இல்லாததால், சீனியர் வீரர்கள் பங்கேற்பதற்கு வசதியாக இதன் ஒரு போட்டி மட்டும் பெங்களூரு, சின்னசாமி மைதானத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.