ஒருநாள் உலகக் கோப்பையில் குறைவான போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார் முகமது ஷமி. ஒருநாள் போட்டிகளில் 195 விக்கெட்டுகளும், டெஸ்ட்டில் 229 விக்கெட்டுகளும், ஐபிஎல் போட்டிகளில் 127 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு முகமது ஷமி காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பெறவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் முகமது ஷமி இடம்பெறவில்லை. கணுக்கால் காயம் காரணமாக ஷமிக்கு லண்டனில் பிப்.27 அன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
முகமது ஷமிக்கு பிரதமர் மோடி விரைவில் நலம்பெற வேண்டுமெனக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு முதல்முறையாக பௌலிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் ஷமி. பயிற்சி செய்யும் புகைப்படங்களைப் பதிவிட்டு, “கையில் பந்தும் மனதில் பேரார்வத்துடனும் போட்டியில் திரும்ப இருக்கிறேன்” எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையிலும் ஷமியினால் விளையாட முடியவில்லை. தற்போது இலங்கை தொடரில் பங்கேற்க முடியவில்லை.
பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, “வங்கதேசத்துக்கு எதிராக செப்டம்பரில் தொடங்கவுள்ள தொடரில் முகமது ஷமி இந்திய அணியுடன் இணைய வாய்ப்புள்ளது” என முன்னமே இது குறித்து தகவல் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.