குவாலியர்: முதல் ‘டி-20’ போட்டியில் பேட்டிங், பவுலிங்கில் மிரட்டிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வெற்றி பெற்றது.
3 போட்டிகள் கொண்ட ‘டி20’ தொடரில் பங்கேற்பதற்காக வங்கதேச அணி இந்தியா வந்துள்ளது. முதல் போட்டி குவாலியரில் உள்ள புதிய மாதவராவ் சிந்தியா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அர்ஷ்தீப் அசத்தல்: வங்கதேச அணிக்கு அர்ஷ்தீப் சிங் தொல்லை தந்தார். இவரது ‘வேகத்தில்’ லிட்டன் தாஸ் (4), பர்வேஸ் ஹொசைன் எமான் (8) வெளியேறினர். வருண் சக்கரவர்த்தி ‘சுழலில்’ டவ்ஹித் (12), ஜாகர் அலி (8) சிக்கினர். மயங்க் யாதவ் பந்தில் மஹ்முதுல்லா (1) அவுட்டானார். கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (27) ஆறுதல் தந்தார். ரிஷாத் ஹொசைன் (11), டஸ்கின் அகமது (12) நிலைக்கவில்லை.
வங்கதேசம் 19.5 ஓவரில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மெஹ்தி ஹசன் மிராஸ் (35) அவுட்டாகாமல் இருந்தார். இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
சபாஷ் சாம்சன்: எளிதான இலக்கை துரத்திய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். ஷோரிபுல் வீசிய முதல் ஓவரில் சாம்சன் 2 பவுண்டரிகள் விளாசினார். டஸ்கின் அகமது வீசிய 2வது ஓவரில் அபிஷேக் (16) ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடித்து ‘ரன்-அவுட்’ ஆனார்.டஸ்கின் வீசிய 5வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், 29 ரன்னில் ஆட்டமிழந்தார். சாம்சன் (29) நம்பிக்கை தந்தார்.
நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ஹர்திக் பாண்டியா ஜோடி கைகோர்த்தது. டஸ்கின் வீசிய 12வது ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளும், அதைத் தொடர்ந்து விளாசிய பாண்டியா ஒரு சிக்ஸரும் விளாசி வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 11.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாண்டியா (39), நிதிஷ்குமார் (16) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்திய அணியில் மயங்க் யாதவ் 22, நிதிஷ் குமார் ரெட்டி 21 ரன்களுடன் களமிறங்கினர். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டு 23 வயதுக்குட்பட்ட வீரர்கள் இந்தியாவின் T20I XI இல் அறிமுகமானார்கள். இதற்கு முன், பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா 2016ல் அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகமானார்கள்.
வேகத்தில் அசத்திய மயங்க் யாதவ், தனது முதல் ஓவரை ‘மெய்டனாக’ வீசினார். சர்வதேச டி20 அரங்கில் அறிமுகமான முதல் ஓவரை ‘மெய்டனாக’ வீசிய 3வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன், அகர்கர் (எதிர்: தென்னாப்பிரிக்கா, 2006, இடம்: ஜோகன்னஸ்பர்க்) மற்றும் அர்ஷ்தீப் சிங் (எதிர் இங்கிலாந்து, 2022, இடம்: சவுத்தாம்ப்டன்) அற்புதமாக இருந்தனர்.
இந்தியா இன்னும் பந்துகள் மீதமிருக்க (49) சிறந்த வெற்றியைப் பதிவு செய்தது. இதற்கு முன், 2016ல் ஹராரேயில் ஜிம்பாப்வேக்கு எதிராக 100 ரன்களை சேஸ் செய்து, 41 பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்தியா வெற்றி பெற்றது.