மான்செஸ்டர்: மூன்றாவது ‘டி-20’ போட்டி மழையால் ரத்தானது. தொடர் 1-1 என சமன் ஆனது.
3 போட்டிகள் கொண்ட ‘டி20’ தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று மான்செஸ்டரில் நடைபெற இருந்தது. ஆனால் கனமழை காரணமாக டாஸ் கூட எடுக்காமல் போட்டியை ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர். இதையடுத்து, தொடர் 1-1 என சமநிலையில் இருந்ததால், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் கோப்பையை பகிர்ந்து கொண்டன.
புரூக் கேப்டன்: இரு அணிகளும் அடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும். முதல் போட்டி செப்., 19ல் நாட்டிங்ஹாமில் நடக்கிறது. மீதமுள்ள போட்டிகள் லீட்ஸ் (செப். 21), செஸ்டர் லீ ஸ்ட்ரீட் (செப். 24), லார்ட்ஸ் (செப். 27), பிரிஸ்டலில் (செப். 29) நடக்கிறது.இத்தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து காயம் காரணமாக ‘ரெகுலர்’ கேப்டன் ஜோஸ் பட்லர் விலகினார். புதிய கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இதுவரை 15 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளார்.