சேலம்:குஜராத் அணிக்கு எதிரான புச்சி பாபு லீக் போட்டியில் இந்தியன் ரயில்வே அணியின் விவேக் சிங், பிரதம் சிங் சதம் அடித்தனர். புச்சி பாபு கிரிக்கெட் தொடர் (4 நாள் போட்டி) தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் (TNCA) நடத்தப்படுகிறது. போட்டியின் முதல் சுற்று நேற்று தொடங்கியது.
சேலத்தில் தொடங்கிய இப்போட்டியில் இந்திய ரயில்வே மற்றும் குஜராத் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ரயில்வே அணிக்கு சிவம் சவுத்ரி (88) சிறப்பான தொடக்கம் தந்தார். விவேக் சிங் (104), பிரதம் சிங் (130) ஆகியோர் சதம் அடித்தனர். முதல் நாள் முடிவில் ரயில்வே அணி முதல் இன்னிங்சில் 429/6 ரன்கள் எடுத்திருந்தது. குஜராத் தரப்பில் சித்தார்த் தேசாய் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
திரு சிங் செஞ்சுரியன்: கோவையில் நடக்கும் லீக் ஆட்டத்தில் மும்பை, ஹரியானா அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஹரியானா அணிக்கு நிஷாந்த் சித்து (91), திரு சிங் (130*) உதவினர். ஹரியானா முதல் இன்னிங்சில் 288/6 ரன்கள் எடுத்தது.
திருநெல்வேலியில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் மத்தியப் பிரதேசம் (எம்பி) மற்றும் ஜார்கண்ட் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த எம்பி அணி ஆட்ட நேர முடிவில் 225/8 ரன்கள் எடுத்தது. சுபம் குஷ்வா (84) அரைசதம் அடித்தார்.
ஆயுஷ் அபாரம்: திண்டுக்கல், நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடக்கும் லீக் போட்டியில், சத்தீஸ்கர், ஜம்மு – காஷ்மீர் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்று முதலில் பேட் செய்த சத்தீஸ்கர் அணியில் ஆயுஷ் பாண்டே (138) சதம் அடித்தார். சத்தீஸ்கர் அணி முதல் இன்னிங்சில் 278 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. காஷ்மீர் தரப்பில் அபித் முஷ்டாக் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். காஷ்மீர் அணி முதல் இன்னிங்சில் 29/2 ரன்கள் எடுத்தது.