புதுடெல்லி: சர்வதேச அளவில் மீண்டும் களமிறங்குவதற்காக இந்திய வீரர் ஷமி ரஞ்சி கோப்பையில் விளையாட உள்ளார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு வயது 34. இதுவரை 64 டெஸ்ட் (229 விக்கெட்), 101 ஒருநாள் (195), 23 சர்வதேச ‘டி20’ (24) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு (நவம்பர் 19) அகமதாபாத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலகக் கோப்பை (50 ஓவர்) இறுதிப் போட்டியில் விளையாடினார்.
கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வந்த அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் ‘ஆபரேஷன்’ செய்யப்பட்டது. பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்சிஏ) காயத்தில் இருந்து மீண்டு வரும் ஷமி, பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டார்.
இந்திய அணிக்கு திரும்ப, ரஞ்சி கோப்பை தொடரில் பெங்கால் அணிக்காக ஷமி விளையாட உள்ளார். ரஞ்சி டிராபியின் முதல் இரண்டு ஆட்டங்களில் பெங்கால் உ.பி (அக். 11-14), பீகார் (அக். 18-21) ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது. ஷமி இந்த இரண்டு போட்டிகளில் ஏதாவது ஒன்றில் விளையாடலாம்.
இந்தியா வரும் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பெங்களூருவில் அக்டோபர் 19-ம் தேதி தொடங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் புனே (அக். 24-28) மற்றும் மும்பையில் (நவம்பர் 1-5) நடைபெறும். ரஞ்சி கோப்பையில் ஷமி தனது உடற்தகுதி மற்றும் திறமையை நிரூபித்தால், அவர் நியூசிலாந்து தொடருக்கு தேர்வு செய்யப்படலாம்.