வாஷிங்டன்: ‘நாட்டில் ஜனநாயக அமைப்புகள் செயல்பாட்டில் இல்லை. இதனால் யாத்திரை செல்லும் கட்டாயம் ஏற்பட்டது’ என லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல் தெரிவித்தார்.
ஒரு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ராகுல், வாஷிங்டனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என்ற காரணத்தால், யாத்திரை தொடங்கும் எனது முடிவு. நாட்டில் ஜனநாயக அமைப்புகள் செயல்படவில்லை.ஜனநாயகத்தில் பொதுவாக வேலை செய்யும் அனைத்து பிரிவும் வேலை செய்யாததால், அரசியல் ரீதியாக யாத்திரை செல்ல கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம். மக்களை நேரடியாக சந்திப்பதை தவிர வேறு வழியில்லை என்று கட்சி உணர்ந்து இந்த நடவடிக்கையை எடுத்தது.
தனிப்பட்ட அளவில், இது நான் எப்போதும் செய்ய விரும்பிய ஒன்று. சின்ன வயசுல இருந்தே ஒரு நாள் நாடு முழுக்க நடக்கணும்னு கனவு. காங்கிரஸ் மற்றும் ஆளும் பாஜக இடையேயான போட்டி இந்தியாவின் எதிர்காலத்திற்கான போட்டியாகும். இந்தியாவில் ஒரு கருத்தியல் போர் நடந்து கொண்டிருக்கிறது.
அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள, சமூகத்தின் பல்வேறு துறைகளுடன், குறிப்பாக விவசாயம், நிதி மற்றும் வரிவிதிப்புத் துறைகளில் நேரடியாக தொடர்புகொள்வது அவசியம்.அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற ஜனநாயக நாடுகள் உற்பத்தியில் மீண்டும் கவனம் செலுத்த வேண்டும். உலக உற்பத்தியாளர் என்ற தனது பங்கை இந்தியா சீனாவிடம் விட்டுக் கொடுத்துள்ளது.
நீங்கள் உற்பத்தியைப் புறக்கணித்து, சேவைப் பொருளாதாரத்தை மட்டுமே நடத்தினால், உங்களால் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியாது. உலகப் பொருளாதாரத்தில், குறிப்பாக உற்பத்தித் துறையில் அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா தனது பங்கை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு ராகுல் பேசினார்.